Thursday, October 18, 2012

Living in Facebook - A Research Article


இதுதான் நான் ( Dr. Nagarajan) எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியின் தலைப்பு. நான் தற்காலம் எனது போஸ்ட் ரிசர்ச் டாக்டரேட் செய்து வரும்
பல்கலை கழகத்திற்காக நான் பதிவு செய்துள்ள ஒரு தலைப்பு......
எல்லோரும் பேஸ்புக் ....பேஸ்புக் என்று பேசி வரும் இந்தக் காலத்தில், பேஸ்புக் நடைமுறையில் எங்கனம் உள்ளது என்று தெரிந்து கொள்ள அதில் வாழ்ந்தால் மட்டுமே முடியும்...அதாவது ரியாலிட்டி ஷோ.... அதன் அமைப்பிலேயே பங்கு பெற்று

அதன் அனுபவம் பெற வேண்டும்.......

தவமாய் தவமிருந்து பேஸ்புக்கின் உள்ளும் புறமும் அறிய, நான் அதனுடனேயே இத்தனை நாட்கள் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது..... நான் இந்த நிமிடம் கூட எதுவும் சொல்லாமலேயே விலகியிருக்கலாம்....ஆனால் என்னால் அது  முடியவில்லை....ரியாலிட்டி ஷோவில் பங்கு கொண்ட ஒரு நடிகன் அந்த பாத்திரமாகவே மாறி, முகமூடியை கழற்ற மனம்

வரவில்லை......அது நான் உண்மையாகவே வாழ்ந்த ஒரு  வாழ்க்கை....எத்தனை மனிதர்கள்...எத்தனை குணங்கள்...எத்தனை

ஆதரவுகள்...எத்தனை எதிர்ப்புகள்....அனைத்தையும் உங்களிடம் பகிரப் போகிறேன் இப் பதிவின் மூலம்.....நீங்களும் தெரிந்து  கொள்ள வேண்டும் நான் தெரிந்து கொண்டதை.....இல்லையா?

என் ஆராய்ச்சிக் கட்டுரை கீழ்க்காணும் அத்தியாயங்களாகப் பிரித்திருக்கிறேன்......

- நட்பு
- அன்பு
- ஆசை
- வழக்கங்கள்
- பொருளாதாரம்
- காதல்
- காமம்
- உண்மை
- மனம்
- பகிர்தல்
- தைரியம்
- வியாபாரம்
- அரசியல்
- சாதி மதம்
- தலைமை
- நன்றி உணர்வு



நட்பு: 

முகநூளில் நட்பு விழைவது என்பது என்னவோ ஒரு கப் காபி சாப்பிடுவது மாதிரி...கேட்பவர்களுக்கு எல்லாம் நட்பு  கிடைக்கிறது....பெண்ணின் பெயரில் வரும்போது சில நேரங்களில் மிக வேகமாக நட்பு கிடைக்கிறது.... அனால் நான் பார்த்த வரையில் இந்த நட்பு ஒரு மேலோட்டமானது. (Superflous). ஒருவருக்கும் அடுத்தவர் மேல் நிஜமான நட்பு இல்லை. சிலர் முன்பே பழகி இருந்து இங்கு நட்பில் இணையும்போது சற்று அண்மை தெரிந்தாலும், நிஜத்தில் யாரோ ஒருவர் யாரோ ஒருவருடன் நட்பு கொள்கிறார்கள். இதற்கும் தினசரி ரயிலில் ஒரு இடத்திலிருந்தது மற்றொரு இடத்திற்கு வேலைக்குப்
போகையில் சந்திக்கும் ரயில் சிநேகிதம் போல் இதுவும். நட்பில் அழுத்தமில்லை. பல நாட்கள் பழகி இருந்தாலும், ஒரு ஒற்றை
கணத்தில் நட்பை நீக்கிவிடும் சாத்தியம் இதில் மிக அதிகம். அதைத்தான் அனைவரும் இங்கே விரும்பியும் ஏற்கிறார்கள்.  இதற்குப் பெயர் நட்பல்ல. பரிச்சயம்..... நட்பு இறுகி நாளடைவில் ஒரு விதத்தில் நெருங்கத்தான் செய்கிறது. அனால் அதில் அத்தனை அழுத்தமில்லை என்பதுதான் என் கணிப்பு. ஆக, இத்தகைய நட்பில் இருசாராருக்கும் எவ்வித பயனும் இல்லை. ஒரு பொழுத் போக்கு நட்பு மட்டுமே...நீ சொல் நான் கேட்கிறேன் அல்லது அதை லைக் செய்கிறேன் அல்லது அதிலிருந்து மாறுபடுகிறேன் எனும் எல்லை வரை மட்டுமே...அதை மீறி எதுவும் நடப்பதில்லை.........

அன்பு: 

இரண்டு முகம் தெரியாத நண்பருக்குள் அன்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றுதான் நேற்று வரை நினைத்திருந்தேன். அன்பின் மிகுதியால் அழுத அந்தப் பெண்ணை உணரும்வரை. ஒரு நல்ல முக நூல் நண்பன் நோய் வாய் பட்டாலோ, இல்லை துன்பம் நேர்ந்தாலோ எல்லோரும் அவரிடம் அன்பு செலுத்துகிறார்கள். சற்று நெருங்கியவர்கள் அந்த நண்பனின் துன்பம் தீரும்

பொருட்டு தினசரி அவரைக் குறித்த தங்களின் கவலையை வெளிப் படுத்துகிறார்கள். அந்த எல்லைக்கு மேல் அன்பு செலுத்துகிறார்களா என்பது கேள்விக்குறி....தனிப்பட்ட அக்கறைகள் பாலினம் சார்ந்தவையாக இருப்பதினால் அதை நான் பொதுப்படை ஆக்கவில்லை.....

ஆசை: 

ஆசை என்பதை இருவகைப் படுத்துகிறேன். ஒன்று பொருள் மீது ஆசை...மற்றது பாலினக் கவர்ச்சி. பொருள் மீது ஆசை என்பதில் பணமும் வருகிறது. எனக்குத் தெரிந்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக பணம்
இழந்தவர்கள் தவிர இந்த முகநூல் இந்த விஷயத்த்தில் மிக எச்சரிக்கையாகவே இருக்கிறது. அளந்து போடுகிறார்கள். பண  விஷயத்தில் பல முறை யோசிக்கிறார்கள். யோசிக்காமல் செய்த சிலர் பணம் இழந்த கதைகளை நான் என் ஆராய்ச்சிப் பயணத்தில் கடந்து வந்திருக்கிறேன்....

பாலினக் கவர்ச்சி என்பது இங்கு மிகவும் அதிகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, முகம் தெரியாத ஒரு முக நூல் நண்பரிடம் (அது பெண்ணா ஆணா என்று கூட தெரியாமல்) செக்ஸ் பேசலாம் வா என்று அழைக்கிறார்கள். தங்கள் கௌரவம் என்னாவது  என்று கூட கருதாமல் கூசாமல் பெண்களின் ஐடி வைத்திருப்பவர்களை உள்டப்பியில் சென்று காமம் பேசுகிறார்கள். இதில் என்ன விஷயம் என்றால் சிலர் அதற்கு உடன் படுவதுதான். இருவருக்கும் அது விருப்பமாக இருக்கிறது....பேசுபவனும் கேட்பவனும் பெண்ணா ஆணா என்று தெரியாமலேயே..... ஒருவேளை பெண் வேடமணிந்த ஆண் மற்றவனை கோமாளியாக்க முயன்றால் நல்ல நகைச்சுவை கிடைக்கும்....... இங்கு பல பெண்கள் பெயரில் உள்ள நிஜப் பெண்கள் கூட தங்களின் முகவரியோ, தொலை பேசியோ அல்லது புகைப்படமோ தாங்கள் விரும்பினால் மட்டுமே பகிரும் அளவிற்கு மிக அந்தரங்கமாக ரகசியங்களை பேணிக் காக்கிறார்கள். வெளிப்படையாக அடையாளம் தெரிந்த எந்தப் பெண்ணிடமும் யாரும் வம்பு வைத்துக் கொள்வதில்லை..... அதே போல பல நல்ல பெண்கள் தங்களுக்கு இதுபோல ஏதேனும் நிகழ்ந்தாலும் வெளியே சொல்வதில்...தைரியக் குறைவு என்றே தோன்றுகிறது..... 

நான் முகநூலில் பரிச்சயப் பட்ட சில நாட்களிலேயே எனக்கு மூன்று பெண்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் என்னை  விட வயதில் சற்று சிறியவர்கள். அந்த அழைப்பில் போதை இருந்தது. நான் எதுவும் பதில் கூறாமல் அவர்களை புறக்கணித்து  விட்டேன்... பின்னொரு நாளில் அவர்களுக்கு பணத்தேவை என்றார்கள்..நான் மறுத்து விட்டேன்....என் நட்பு வட்டத்திலிருந்து  அவர்களே மெல்ல விலகி விட்டார்கள்.

பல பெண்கள் தங்கள் நிஜப் பெயரில் வராமல் போலிப் பெயரில் வருகிறார்கள். இது அவர்களுக்கு எதையும் பேசும் கூடுதல்  சுதந்திரத்தைத் தருகிறது. எதை வேண்டுமானாலும். காமக் கவிதைகளை ரசிக்கிறார்கள். குடும்பப்பெண் செய்ய முடியாததை  இந்த போலி ஐடிக்கள் அவர்களுக்கு வெகுவாக உதவுகின்றன. இது போலவே ஆண்களும். பெண் பெயரில் உலா வருகிறார்கள்

அல்லது மற்றவர் கண்டுபிடிக்க முடியாத ஒரு வகையில். அவர்களுக்கு பெண்ணிடம் நெருங்கிப் பேசவோ அல்லது பிடிக்காதவரை திட்டவோ மிகவும் வசதியாக இருக்கிறது. ஆனால் என் முக நூல் நண்பர் ஒருவர் செய்த காரியம் ஆச்சர்யமாக இருந்தது. அவரை விரும்பாத ஒரு விஷமி ஒருவர் அவரது தங்கையின் சுவரில் வந்தது தகாததை சொல்லிப் போனார். என் நண்பர் மிகவும் சிரமப் பட்டு அந்த போலியை கண்டுபிடித்து , நாலு பேரை வைத்து அடித்து கையை உடைத்ததாகச் சொன்னார்...எப்படி கண்டு பிடிக்க முடிந்ததது என்றபோது, அவர் சில ஆயிரங்களை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து IP அட்ரஸ் கண்டுபிடித்து ஆளை கண்டு பிடித்திருக்கிறார்....ஆகவே போலி ஐடி காரர்கள் ஜாக்கிரதை....உங்களை கண்டு பிடிக்க

வழி இருக்கிறது....

வழக்கங்கள்: 

நல்ல வழக்கங்கள் எவை என்பதை விட தீய வழக்கங்களை தூண்டி விடுகிறது முகநூல். நல்ல உதாரணம் குடி மற்றும் டாஸ்மாக். எல்லா முக நூல் நண்பர்களும் குடியை சாதாரணமாகச் சொல்லி செல்கிறார்கள். சிலர் அது குறித்து பெருமையும் கொள்கிறார்கள். சிலர் அதனுடன் கூடச்சேர்ந்து புகைப்படம் எடுத்துப் போட்டு தங்கள் நிலையை சொல்கிறார்கள். எங்களுடன்
சேர்ந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் நாங்கள் எடுத்த ஒரு போட்டாவால் அந்த நண்பரின் வாழ்க்கை நாசமானது. அவர் வீட்டை விட்டு விரட்டப் பட்டார். நடுத்தெருவில் லுங்கியுடன் அலைந்து கொண்டிருக்கும் நல்ல மனிதனை கெடுத்தது குடி  ல்ல....முக நூல். அதில் அவர் சேராதிருந்தால் அவர் கூடி குலாவி குடித்திருக்க மாட்டார்..அவர் உண்டு அவர் வாழ்க்கை

உண்டு என்று போயிருக்கும். குடிப்பதை பெருமையாகச் சொல்கிறது முக நூல். அப்படி செய்பவனை, நண்பன் எனும்  முறையிலும் கூட யாரும் தடுத்து அறிவுரை செய்ததாகக் காணோம். காரணம் நான் மேலே சொன்ன மேலோட்டமான நட்பு., நமக்கென்ன போயேன் என்று விட்டேத்தியாக போகும் நட்பு.... பெரும்பாலான முகநூல் நண்பர்கள் சந்திப்பில் குடி இல்லாமல் இருப்பதில்லை. குடிப்பதற்கு ஒரு காரணம் ஒன்றே.தேவையாக  இருக்கிறது. மிகவும் கவனத்துடனும் அல்லது ஏதோ ஒரு தீவிர காரணத்துடனும் இருப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் ஒரு  வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ராஜ மரியாதை யுடன் உபசரணை நடந்து அவர்களும் மரணக்குழிக்குள் தள்ளப் படுகிறார்கள். இதன் மூல காரணம் ஒரு காரணம், சந்திப்பு....பல பேர் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முகநூல்...நல்லதை வேகமாக கற்றுத் தருவதில்லை.....பொல்லாததை மிக வேகமாக கற்றுத் தருகிறது....சமீபத்தில் அத்தகைய ஒரு சந்திப்பில் குடிக்கு பழக்கம் இல்லாத அந்த நண்பர் சிறிதளவே குடித்து இரண்டு நாட்கள் அதன் தாக்கத்தால் தவித்ததை நான் கண்டும் காணாமலும் போனதிற்கும் இந்த பாழாய்ப் போன ஆராய்ச்சிதான் காரணம்....நான் தடுத்தாலும் கேட்காத
நிலைமை அவருக்கு....கூட்டத்தில் தான் குடிக்கவில்லை என்றால் ஒரு கௌரவக் குறைச்சலாக அவர் நினைத்திருக்கக் கூடும்....

மற்றொன்று சிகரெட்....இது பற்றி அதிகம் யாரும் பேசவில்லை என்றாலும் பலர் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படங்களை  (நிஜமாகவே இதுதான் 'புகை'ப்படம்) அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனை பேரால் இதிலிருந்து வெளியே வர முடிகிறது? இது பற்றி மற்றொரு இடத்தில் சொல்கிறேன்.....


பொருளாதாரம் 

இங்கு நான் சொல்லப்போவது யார் இந்த முகலூலில் இருக்கிறார்களோ அவர்களின் பொருளாதாரம் பற்றி. இங்குள்ள  முகநூலாளர்கள் ஏறக்குறைய இருவது வயது கடந்து விட்டு தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் விரும்பி ஏற்கும் செலவு இந்த முக நூல் செலவு. பலர் தங்களின் செல் போன்களில் முகநூல் பக்கத்தை பதித்து
அதற்கு தயங்காமல் பணமும் கட்டுகிறார்கள். இவர்களுக்கு இது கூடுதல் சுமைஎன்றாலும் அதை பொருட்படுத்துவதில்லை. எத்தனை நஷ்டம் வந்தாலும் இங்கு முக நூலில் செலவு செய்து இருப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். அதைவிட  மேலாக, பல செல் போன் கம்பனிகள் இந்த மனோ நிலைமையை நன்றாக உபயோகித்து பல ஆப்பர்களை கொடுத்து
இவர்களை தங்கள் வசம் ஈர்க்கிறார்கள்....உங்களின் மனோ நிலைமை அடுத்தவனுக்கு வியாபாரம்.....இதுதான் உண்மை...

உண்மை 

மிக ஆச்சர்யமான உண்மை....முகநூலில் உள்ளவர்கள் 99 .9 சதவீதம் பேர் உண்மை பேசுகிறார்கள். போலியாக முகத்திரை போட்டுக் கொள்வதில்லை..அவர்களின் உண்மையான விருப்பு வெறுப்புகளை முகநூலில் பதிகிறார்கள்....போலி முகவரியில்  வருபவர்கள் கூட உண்மையை பேசுகிறார்கள்.... அதே நேரத்தில் தங்களின் சொந்தக் கதைகளை சொல்லிக்கொண்டு கழிவிரக்கம் தேடுபவர்களையும் இங்கே அதிகமாக காண முடியவில்லை.....

நேர்மை, மற்றும் தைரியம் 

நிறையபேருக்கு தைரியமாக தங்கள் நியாங்களை சொல்லத்தெரிகிறது...அடுத்தவர் மனம் புண்படாமல் சொல்லத்தெரிகிறது.

வெகு சிலரே, அசிங்கமான வார்த்தைகளால் தாங்கள் சொல்ல வந்ததையோ திட்ட வந்ததையோ சொல்லி, அவர்களே விலக்கி வைக்கக் காரணமாகிறார்கள். பல பெண்கள் மிக நேர்மையாக இட்ட பதிவுகள் ஆச்சர்யம் அளிக்கிறது. மிகவும் போற்றத்தக்க  இடத்தில் இருக்கும் ஒரு பெண்மணி இடும் சில அந்தரங்கமான கவிதைகளை அனைவரும் இரசிக்கிறார்கள்...அதைவிட, அந்தப்  பெண்மணி அதை இட்டுவிட்டு படியுங்கள் என்று சொல்லும் தைரியமும் அவரின் நேர்மையும் பிடித்திருக்கிறது....காமம் கலந்த  கவிதைகள் மற்றும் தகவல் நிலைபாடுகளை பால் வித்தியாசம் இல்லாமல் இரு பாலரும் இடுகிறார்கள் அல்லது  இரசிக்கிறார்கள். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். வெகு நாட்களுக்கு முன்பே வெளி நாடுகளில் சகஜமாகப் போய்விட்ட இந்த ஒரு காட்சி, தற்போது இங்கேயும் வந்திருக்கிறது. செக்ஸ் கல்வி தேவையா எனும் கேள்வி எழுந்தால் கண்டிப்பாக முகநூல் நண்பர்கள் 'தேவை' என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது முகநூல்.... செக்ஸ்
என்பதை இன்னும் போர்வை போர்த்தியே வைத்திருக்கும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் இதுபோல் முக நூல் அந்த தளையிலிருந்து விடுபட நல்ல உதவியாக இருக்கும்.......


வியாபாரம்

நான் மிக மிக வருத்தப் படும் ஒரு விஷயம் முகநூலையும் வியாபாரத்தையும் யாரும் சம்மந்தப் படுத்தாதுதான்...இதில் மார்க்  ஜுச்கேர்பெர்க் மாத்திரம் இதிலே இலாபப் பட்டிருக்கிறார்....நாம் அனைவரும் இங்கே பேசிப் பேசி .....அலைபேசிக்  கம்பனிகளுக்கும், முகநூலுக்கும் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்...நம்மில் எத்தனை பேர் இந்த முகநூலை வியாபாரத்திற்காக உபயோகித்தோம்? எத்தனை பேர் எத்தனை கம்பனிகள், எத்தனை பொருள்கள், எதை வாங்க வேண்டும்,  எதை வாங்கக் கூடாது என்று யாரும் யாருக்கும் சொல்லவில்லை.....நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நண்பர்கள்  என்றால் இந்த அருமையான அடித்தளத்தை உபயோகித்து உங்களின் அல்லது உங்களின் வியாபாரத்தை பெருக்கி இருக்க
வேண்டாமா? எத்தனை எத்தனை வியாபார சாத்தியங்கள்? எத்தனை சம்பாத்தியங்களை நாம் அனைவரும் இழந்திருக்கிறோம்?  என்ன என்ன வியாபாரம் செய்திருக்கலாம் என்று நான் ஒரு சிறு பட்டியல் தருகிறேன்.......எல்லாம் முக நூல் நண்பர்களுக்குள்..

- வாகனம் வாங்கி விற்றல்.....
- காய் கறிகள் திருநெல்வேலியிலிருந்து வாங்கி சென்னைக்கு விற்றல் (உதாரணம்)
- மதுரை சின்னாளம்பட்டு புடவை மதுரை நண்பர் டெல்லியில் இருக்கும் நண்பருக்கு அனுப்புதல்....
அதுபோல காஞ்சிபுரம் பட்டு துபாய்க்கு....
- வெப் பேஜ் உருவாக்குதல்
- வீடு நிலம் விற்பனை...]
- வேலை வாய்ப்பு தகவல்
- திருமணப் பரிவர்த்தனை
- எலெக்ட்ரிகல் சாமான் வாங்கி விற்றல்.....
- பிரிண்டிங்
- கிராபிக் டிசைன்...
- உங்கள் கம்பனிக்கு தேவையான பொருள் ...என்றாவது இந்த முகநூலில் தேவை என்று கேட்டிருக்கிறீர்களா?
நண்பர் ஜோ பெலிக்ஸ் ஷீட் மெட்டல் வேலை செய்கிறார்...எத்தனையோ அவருக்கு பணிகள் என்னால் கொடுத்திருக்க

முடியும்.....அவர் என்ன செய்கிறார் என்று எனக்கும் தெரியாது நான் என்ன செய்கிறேன் என்று அவருக்கும் தெரியாது......ஒரு

முறை இந்த முகநூலில்...'நான் இன்னார்...நான் இன்னது செய்கிறேன்....எனக்கு இன்னது வேண்டும்...அல்லது என்னிடம் இன்னது உள்ளது....' என்று யாராவது பதிவு செய்திருக்கிறோமா? இல்லையே? என்ன வேலை செய்கிறாய் என்று பேச்சின் முடிவில் கேட்டு விட்டுப் போகிறோம்....நாம் பேசுவதெல்லாம் என்ன? நீ அன்னிக்கு அந்த ஸ்டேடஸ் போட்டாயே? அந்த ஆள் பேக் ஐடியா? அந்த பொண்ணு லூசு....

சதீஷ் பழமலை நினைத்திருந்தால் பங்கு வங்கி விற்பதைப் பற்றி எழுதி இருக்கலாம்... அதைப் பார்த்து வேறு யாரவது அவரிடம் உதவிக்கு நாடலாம்...அல்லது சதீஷ் புதியவர்களுக்கு எப்படி செயல்படவேண்டும் என்று குறிப்பு சொல்லலாம்...எத்தனை நல்ல விஷயங்கள் இருக்கின்றன?

என் நண்பரின் காருக்கு அலங்காரப் பொருளுக்காக பல கடைகள் தேடி இறங்கினோம்...நம்ம சித்தப்பு உமர் பாரூக் அந்த தொழிலில்தான் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்....அவரிடம் சாமான் வாங்கினால் அவர் நம்மை ஏமாற்றி விடுவாரா? தெரியாதவரிடம் வாங்குவதை விட தெரிந்தவரிடம் வாங்குவது நல்லதில்லையா? சண்முகநாதன் சாமிதான்
அவர்கள் கம்ப்யூடர் கிராபிக்ஸ் இல் விற்பன்னன் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு CD யில் பல நல்ல விஷயங்களை பதிவு செய்து பிள்ளைகளின் பிறந்த நாள் பரிசாக புதுமையாகக் கொடுக்கும் விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஸ்ரீதேவி எக்ஸ்போர்ட் கம்பனி தொடங்க ட்ரைனிங் கொடுக்கிறார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? வசந்த் கிராபிக் டிசைனர் என்பது தெரியும்...அவர் செய்யும் நற்பணிகளும் தெரியும்....யாராவது அவரிடம் ஏதாவது ஒரு வியாபாரம் கொடுத்திருக்கிறோமா? என்றால் இல்லை...ஏனெனில்....நாம் முக நூலை கேலிப் பேச்சிற்கும் நம் சிந்தனை பதிவிற்கும் அல்லாது வேறு திசையில் நான் யோசிக்கவில்லை.......

இனி மேல் நீங்கள் யோசிப்பீர்கள்....பதியுங்கள்...உங்களைப் பற்றி...உங்கள் தொழிலைப் பற்றி....மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்...எல்லோரும் தங்கள் முகப்பு பக்கத்தை நல்ல முன்னுரையுடன் பதியுங்கள்....மற்றவர்களுக்கு உபயோகப் படும்...... இந்த ஊடகத்தைத் தவிர வேறு எதுவும் மிக வேகமாக விஷயம் சென்றடையாது...

எல்லாவற்றையும் சொல்லுங்கள்....அந்த சோப்பு நன்றாக உள்ளது....இந்த எண்ணை நன்றாக இல்லை....சென்ற வாரம் தொடங்கிய புதிய ஓட்டல் பற்றி சொல்லுங்கள்...இந்த முகநூலை ஆரோக்கியமான வியாபாரத் தளமாக மாற்றுங்கள்....உங்கள் நன்மைக்காக..... நல்ல சாதனங்களை சொல்லுங்கள்....உங்கள் ஊரில் இல்லாத சாதனங்களை வேறு இடத்திலிருந்து வாங்கி அனுப்ப உங்கள் நண்பர்களின் உதவியை கோருங்கள்.....இதுதான் வெளிநாட்டவர் இந்த முகநூலையும் ப்ளாக் சைட்டுகளையும் உபயோகிக்கும் முறை....அவர்களைப் போல வாழுங்கள்......முகநூல் நல்ல தளம்....உங்கள் பணத்தை நல்ல வழியில் பெருக்க...

அரசியல்

அரசியலுக்கு மிகவும் உபயோகப்படும் நல்ல தளம் இது...இது கட்சிகளுக்கும் பொருந்தும் அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்...அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சிக்கிறார்கள்...அதைத் தாங்கும் மனப்பான்மை இருந்தால், நேமை இருந்தால் முக நூலை விட செலவு குறைந்த அரசியல் தளம் எதுவும் இல்லை...படித்தவர்கள் இருக்கும் தளம் முகநூல்...கட்சிகளோ அரசாங்கமோ முடிவு எடுக்கும் முன் இங்கே வந்து மக்கள் கருத்துக்களை கேளுங்கள்...அதன் அடிப்படையில் முடிவுகள் எடுத்தால் சாலப் பொருத்தமாக இருக்கும்...இதை யாராவது போய் அவர்களிடம் சொல்ல வேண்டும் ...அவ்வளவே....கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்....லோக் பால் போன்ற விஷயங்கள் நடந்தேறினால் முகநூளின் பங்கு மிக அதிகமாக இறக்கும்....1985

இல் மறைந்த திரு சுஜாதா அவர்கள் சொன்னார்...' இன்னும் பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியன் கையிலும் செல்போன் இருக்கும்...ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஹோம் கம்ப்யூடர் இருக்கும்' என்றார்..... 'எப்படி சாத்தியம் ? இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு சாத்தியமா?' என்றபோது அவர் சொன்ன பதில்' இந்தியன் எப்போதும் ஏழையாகவே

இருப்பான்....ஆனால் இந்தியா அவனை எப்பாடு பட்டாவது வாங்க வைத்து விடும்' என்று......நிகழவில்லையா அந்த அற்புதம்? அதுபோலத்தான் முக நூலும்.....நடக்கும் என்று எதிர் பார்ப்போம்.....


சாதி மதம்:

ஒரு சாதியை தூக்கி பிடிக்கவும் அல்லது கீழே போட்டு மிதிக்கவும் இதை விட சிறந்த தளம் வேறு இல்லை....இங்கே சாதியைப் பற்றிப் போட்டால், பலர் அதை வரவேற்கிறார்கள், பலர் அதை எதிர்க்கிறார்கள், எதிர்ப்பவர்களுக்கு துணையாக பலர் கிளர்ந்தெழுகிறார்கள், வரவேற்பவர்களுக்கு துணையாக பலர் கிளர்ந்தெழுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் கண்டது....சாதி என்பது ஒவ்வருவரின் அடி மனதிலும் எந்த அளவு புரையோடி இருக்கிறது என்பதுதான்....நான் எந்த ஒரு சாதியையோ மதத்தையோ போற்றுவதும் இல்லை தூற்றுவதும் இல்லை...ஆனால் முக நூலில் என் ஆராய்ச்சிக்காக சாதி எத்தனை தூரம் விரவி புரையோடி இருக்கிறது என்பதற்கு உதாரணம் நான் ஒரு சாதியை உயத்திப்

பிடித்து எழுதிய ஒரு ஸ்டேடஸ் தான்....கிட்டத்தட்ட 100 shares .... ஒவ்வொரு ஷேரிலும் என்னை எதிர்த்து பலரும் என்னை தாங்கிப் பிடித்து பலரும் பின்னூடங்கள் இட்டிருந்தார்கள். வசவுகளின் உச்சம்தான் அந்த பின்னூட்டத்தில். என்னை யாரென்றே தெரியாத பலர் எதோ ஒரு தைரியத்தில் என்னை கண்டபடி திட்டியிருந்தார்கள்.. அவர்களைப் பொறுத்தவரை
அவர்கள் பணியை செய்து விட்டதாக நினைப்பு....எல்லோருடைய மனதிலும் புரையோடி இருக்கும் சாதி எனும் தீ எந்த அளவு எல்லோரையும் பாதிக்கிறது என்பதை நீங்கள் அந்த பதிவுகளைப் பார்த்தாலே தெரியும்...... ஆனால் என்னை பயமுறுத்தும் விஷயமும் அதேதான்...எங்கேயாவது ஒருவன் கிளம்பி பேஸ்புக் வழியே சாதியப் பிரச்சனைகளை தூண்டுவானே யானால் அவனுக்கு நல்ல தீனின் கிடைக்கும். இங்கே இருக்கும் முக நூலாளர்கள் அவரை பின்
பற்றுவர்...நாடு அழியும் என்பதில் ஐயமில்லை...என்னை மிகவும் பாதித்த பதிவு இதுதான்...எனக்கு இதை செய்ய வேண்டி வந்ததில் மிகவும் வருத்தம்...அதைவிட, அந்த பதிவில் சொல்லப் பட்ட மாற்று சாதியரில் பலர் என் நண்பர்கள்...அவர்கள்

மிகுந்த அன்புடன் தங்களை அந்த பதிவு பின்னூட்டத்திலிருந்து தங்களை விளக்கிக் கொண்டு என் மன சாந்தியை  கூடினார்கள்...அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்......என்னை அந்நிலையிலும் உணர்ந்து நட்பு பிரியாமைக்கு.

கலை, இலக்கியம்:

பலர் தெரிந்தோ தெரியமாலோ கவிஞர்களாகவோ, இல்லை இரசிகர்கலாகவோ இருக்கிறார்கள். அவர்கள் அறியாமல்  அவர்களின் உள்ளே உறங்கும் இந்த கலை மற்றும் இலக்கிய இரசனைதான் என் குறி. ஆகவே, நான் பல பல கவிதைகளை கொட்டினேன்....சில நேரங்களில் கதைகளும் எழுதினேன்...எத்தனை பேர் இந்த ஊடகத்தைப் பயன் படுத்தப் போகிறீர்கள்
அல்லது போகிற போக்கில் எனக்கு இதெல்லாம் வராது என்று சொல்லப் போகிறீர்கள் என்று. நீங்கள் என்னை ஏமாற்றவில்லை...உங்களில் பலருக்குள்ளும் கவிதையை இரசிக்கும் ஆர்வம் இருக்கிறது. பலருக்கும் கதைகளை இரசிக்கவும் ஒரு சிலருக்கு கதை எழுதவும் ஆர்வம் இருக்கிறது....எனவே எழுதுங்கள்....நிறைய படியுங்கள் நிறைய எழுதுங்கள்....இந்த தளம் உங்களுக்கு காசில்லாமல் கிடைக்கிறது...டிமிட்ரி சொன்னது போல அவர்கள் பத்திரிக்கைக்கு வேண்டிய ஆட்களை
இங்கிருந்துதான் என்டுக்கிரார்கள். உங்களுக்குள் ஒளிந்துள்ள நல்ல ஒரு கலைஞனை நீங்கள் மற்றும் அன்றி செப்பனிட்டு செதுக்கி வெளிக் கொண்டு வர உங்கள் முக நூல் நண்பர்கள் இருக்கிறார்கள்...

தலைமைத் தகுதி: 

இதை நான் சொல்லியே ஆக வேண்டும்...இது ஸ்டேடஸ் பதிப்பவர்கள் போல. நான் காண்பது வழக்கமாக ஒரு சிலர் மட்டுமே பதிக்கிறார்கள், மற்றவர்கள் அதை ஆமோதிக்கிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள்....ஆனால் பலர் ஸ்டேடஸ் போடவே விரும்புவதில்லை. ஸ்டேடஸ் இடுவது என்பது தலைமைக்கு உங்களை தகுதி படைத்தல்....நீங்கள்

உங்கள் உள்ளத்தில் பட்டதை எழுத வேண்டும்....பின்னூட்டங்கள் மட்டும் இட்டுக் கொண்டிருந்தால் உங்களால் தலைமை ஏற்க முடியாது......எனவே இங்கேயிருந்து தொடங்குங்கள்.....உங்களால் முடியும்....நிறைய படியுங்கள்....உங்கள் பாணியில் அதை ஸ்டேடஸ் ஆக இடுங்கள்....

கற்றல் 

எத்தனை அற்புதமான ஊடகம் இது? எத்தனை விஷயங்களை நாம் கற்க முடியும்? நான் உங்களிடம் புகை பிடிப்பதைப் பற்றி மூன்று தொடர் எழுதினேன். நிறைய பேர் புகைப்பதை விட்டு விட்டார்கள்... நான் உங்களுக்கு புகைப்படம் எடுக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...எத்தனை பேர் அதை மிக ஆர்வமாக கற்கிறீர்கள்....! நான் கவிதை எழுத கற்றுத் தருவதாகக்

கூறினேன்....எத்தனை ஆர்வம் உங்களிடம்! நான் இந்த ஊடகத்தை எண்ணி வியக்கிறேன்...இதன் மகிமையைக் கண்டு வியக்கிறேன்....உங்களில் பலருக்கும் பல விஷயங்கள் தெரிந்திருக்கும்...அதை விருப்பமுள்ள அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுங்கள்...கற்றுக் கொடுப்பதின் மூலம் நீங்கள் மேன்மை அடைகிறீர்கள்.....புதிய கலையை அறிதல் என்பது சாதாரண
விஷயமா? சேலம் பாலாவிடம் நான் சொன்னது போல, ஒரு பேக் லைட் ஷாட் எடுக்க நான் கற்றுக் கொண்ட நாட்கள் சுமார்

10 வருடங்கள். மிகப் பிரமாதமான technic அது... அந்த நாட்களில் கேமிரா மேன் வின்சென்ட் உம, அசோக் குமாரும், பாலு மகேந்திராவும் , PC ஸ்ரீராமும் மட்டுமே செய்த செப்படி வித்தை....நான் மிகவும் கஷ்டப் பட்டு கற்றுக் கொண்டேன்....ஆனால் நீங்கள் என் இரண்டாவது பாடத்திலேயே உங்களை அறியாமல் இந்த உன்னத நுணுக்கத்தை கற்கிறீர்கள்....உங்களுக்கு சொல்லி
தந்ததில் என் செலவு ரூ 2 .5 லட்சம் (நான் அதை கற்ற செலவு)...ஆனால் அது உங்களுக்கு சும்மாவே வருகிறது.....இந்த அற்புதமான முகநூல் தளத்தில்....நல்லதை செய்யுங்கள்....நாடு போற்றும்......

பகிர்தல்: 

உங்கள் அனுபவங்களை பகிருங்கள்...உங்களை மதித்து யாரேனும் உங்களிடம் கவுன்சிலிங் கேட்டால் தயங்காமல் உதவுங்கள்...யாரோ ஒருவரின் வாழ்வில் நீங்கள் விளக்கேற்றுகிறீர்கள்.... எனக்கும் இந்த முக நூல் மிக அழகாக உதவியது...நான்கு பெண் நண்பர்களின் வாழ்க்கையை செம்மைப் படுத்த....நான் இருந்த சில நாட்களில் நான் செய்த மிக நல்ல காரியம், அவர்களுக்கு நல்ல விதமாய் வாழ்க்கையை எடுத்துச் சொல்லியது. என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத மகா பாக்கியம் இது.....அவர்களும் நல்ல உதாரணமாய் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்......

1 comment:

jaya said...

Fortunately I found your blog at http://en.blogillu.com
Very intresting...!! I will follow you my dear blogger.